.
தினமும் சுழல்கிறது பகலும், இரவும். நாளும் பகலோடு உறவாடும் அளவுக்கு இரவோடு உறவாடுவதுண்டா?
.
பகல் புத்துணர்ச்சியை, தன்னம்பிக்கையை, தைரியத்தைத் தருவதுபோல் உணரச் சொல்லும்.
இரவு அசதியை, இயலாமை, அச்சத்தைத் தருவதுபோல் உணர வைக்கும். இரண்டுமே மாயை தான்.
.
இன்றைக்கு விஞ்ஞானம் பகலுக்குள் இரவையும், இரவுக்குள் பகலையையும்
அனுபவிக்க வைக்கக்கூடியது. ஆனாலும் பகல் போல் அல்ல இரவு. இரவு மனித
ஆணவத்தை, திமிரை அடக்க கூடியது. இரவில் விழிக்கத்தெரிந்தவர்கள் ஞானஅறையைத்
திறக்கத் தெரிந்தவர்கள். அதாவது இரவில் விழித்து டி.வி பார்ப்பதை,
நிறுவனங்களில் பணிச் செய்வதைச் சொல்லவில்லை. கண்விழித்து இரவோடு உறவாடுதல்…
.
ஊரே தூங்கும் ஒரு இரவில் தான் புத்தன், தனது அரண்மனையில் இருந்து
தப்பித்தான். ஆழ்ந்து தூங்கியபடிகிடக்கும் மனைவி,குழந்தையைப் பிரிந்து
சன்னா எனும் தனது உதவியாளனோடு வெளியேறும் போது நின்றபடி, சாய்ந்தபடி
துவண்டு சரிந்தபடி, தூங்கும் அரண்மனைக் காவலாளிகளைக் கடந்து செல்லும்போதுச்
சொன்னான்… ”இந்த உலகமே கனவில் உறங்கிக்கிடக்கிறது சன்னா.” என்றான்.
புத்தனின் புறப்பாடு மனித சமூகத்தின் மாயையை, கனவை கலைத்து ஞானத்தைப்
புகட்டும் வகையில் அமைந்தது.
.
அறிவு ஆடி அடங்கியதும் ஞானம் விழித்தெழுவதுபோல…பகலின் படோடோபம்
முடிந்ததும் இரவு விழித்தெழும். ஞானத்திற்குப் பிடித்தது அமைதி. அந்த
அமைதிதான் இரவின் அணிகலன். இரவைத் தீண்டினால் குளுமை வந்து தழுவும்.
காற்று, மரங்களின் உரையாடல்களைக் கேட்க வைக்கும். சிலநேரங்களில் காற்றே ஓசை
எழுப்பி பேசும்.
.
சற்றே அண்ணாந்து பார்த்தால் வான்வெளியில் பகலில் பார்க்க முடியாத பல
நட்சத்திரங்களையும், சில கோள்களைப் பார்க்க முடியும். ஏன் அண்ட வெளியின்
பிரமாண்டத்தை இரவில்தான் தரிசிக்க முடியும். அந்த நட்சத்திரங்களோடு
பேசினால்… அது சொல்லும்…
.
.
“பல கோடி ஆண்டுகளாக இந்த பூமியை நாங்கள் பார்த்து வருகிறோம்.
எங்களுடைய ஆயுளோடு ஒப்பிட்டால் மனிதனே நீ நொடி நேரம் வாழ்ந்து மறையும்
ஜீவனைப்போலானவன். நாங்கள் உனது முன்னோர்களையும் பார்த்துவிட்டோம். உனக்கு
பின்பாக வருபவர்களையும் பார்ப்போம். நீ வசிக்கும் பூமியைக்கூட உன் ஆயுளில்
உன்னால் முழுமையாக சுற்றி பார்த்துவிட முடியாது. ஏன் சுற்றிப்பார்க்கவில்லை
என்றால்…உலகம் பெரிது என்பாய். உன் பூமியைப்போல பலமடங்கு பெரிய பல
நூறுபூமிகள் இந்த அண்டவெளியில் சூழகின்றன. பலநூறு சூரியன்கள் எரிகின்றன.
இந்த சூழற்சிக்கு மையம் எது? உன் பூமிக்கு மட்டும் ஏன் பல சிறப்பு
பாதுகாப்புகள்?” பிரபஞ்சம் எழுப்பும் கேள்விகள் ஞானத்திடம் விடை கேட்கும்.
.
மனிதன் அண்டவெளியை முற்றிலும் அறிய பல லட்ச கேள்விகளுக்கு விடை தேட
வேண்டி இருக்கிறது. தொடர்ச்சியான பல தலைமுறை தேடலில் தான் அரை கேள்விக்கு
விடை கண்டறிகிறான் ஒரு விஞ்ஞானி. அந்த விடையையும் இன்னொருவன் வந்து
மாற்றுகிறான்.
.
லட்ச கணக்கான விந்து அணுக்களில் ஒன்றே உள் நுழையும் என்பதுபோல…
பலகோடி மனிதர்களில் ஒருவரே சாதிக்கிறார். பிரபஞ்ச ரகசியங்களில் ஒரு
முடிச்சை அவிழ்க்கிறார். அவரே, தனது விட்டுச்சென்ற நற்சிந்தனையால்
நற்செயலால் உடலால் மறைந்தும் வாழ்கிறார். விஞ்ஞானியாகவோ, மெய்ஞானியாகவோ
இந்த சமூகத்தில் சாதித்த அவர்களைப் பின்பற்றியோ, அவர்களது அறுவடையைப்
பயன்படுத்தியோ மற்றவர்கள் உண்டு, பிழைத்து, உயிர் வாழ்ந்து, முதுமையில்
மடிந்து மண்ணாகிறார்கள்.
.
மனித இனம் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகளில் நான் பெரியவன், நான்
வெற்றியடைந்துவிட்டேன். வாழ்க்கையில் நான் சாதித்துவிட்டேன் என ஆணவம் பொங்க
மாயையில் வாழ்ந்த மடிந்துவிட்ட பலநூறு கோடி மனிதர்களில்… இன்றும்
நற்சிந்தனையால், நற்செயலால் வாழ்கிற மனிதர்கள் எத்தனைப்பேர்? கிரகம்பெல்
போல் விஞ்ஞானத்தில் சிலநூறு, திருவள்ளுவரைப் போல் மெய்ஞானத்தில் சில நூறு
என எண்ணிக்கை மிகச் சொற்பம்தானே…!





No comments:
Post a Comment