Breaking

LightBlog

Sunday, November 14, 2010

வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு


* வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது கதவை உள்பக்கம் பூட்டிக்கொள்ள வேண்டும். கதவை திறந்து போட்டுக்கொண்டு வீட்டு வேலைகளை செய்யக்கூடாது.

* வீட்டு கதவின் முன்புறம் கண்டிப்பாக `லென்ஸ்' பொருத்தினால் நல்லது. வீட்டின் மர கதவுக்கு முன்பாக கண்டிப்பாக இரும்பு கிரில் கதவுகள் பொருத்த வேண்டும்.

* ஷாப்பிங் அல்லது மார்க்கெட் செல்லும்போது அங்கு புதிய நண்பர்கள் யாரிடமாவது பழக்கம் ஏற்பட்டால் உடனே அவர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள். புதிதாக பழகுபவர்களிடம் வீட்டில் தனியாக இருக்கும் விஷயத்தையும் சொல்லாதீர்கள். தங்கள் கணவர்கள் எப்போது அலுவலகம் செல்வார்கள், எப்போது வீடு திரும்புவார்கள் என்பன போன்ற விஷயங்களையும், கணவர் வெளிïர் செல்லும் விஷயங்களையும் புதிதாக பழகுபவர்களிடம் பெண்கள் சொல்லக்கூடாது.

தற்காப்பு கலை

* வீடுகளில் தனியாக இருக்கும் இளம் பெண்கள் தற்காப்பு கலைகளான கராத்தே போன்ற கலைகளை கற்றுக்கொண்டால் நல்லது. திடீரென்று கொள்ளையர்களாக மாறும் நண்பர்களை சாதுர்யமாக சமாளிக்க வேண்டும். நகைகளை கொடுக்கமாட்டேன் என்று சத்தம் போட்டு ஆபத்தை வரவழைப்பதைவிட, கொள்ளையர்களிடம் புத்திசாலித்தனமாக பேசி அவர்களை வீட்டிற்குள் தள்ளி கதவை பூட்டிவிடலாம். அல்லது மிளகாய் பொடி போன்ற பொருளை கொள்ளையர்களின் கண்ணில் தூவி சமாளிக்கலாம்.

* அறிமுகம் இல்லாத நபர்களையோ, அல்லது ஓரளவு தெரிந்த நபர்களையோ சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வீட்டிற்குள் அனுமதிக்க நேர்ந்தால் அவர்கள் குடிநீர் கேட்டால் கொடுக்காதீர்கள். அவர்கள் எதற்காக வந்தார்களோ அந்த விஷயத்தை மட்டும் பேசிவிட்டு உடனடியாக வெளியே அனுப்பி விடுங்கள்.

* வீட்டு வேலைக்காரர்கள், கார் டிரைவர்கள், சமையல்காரர்களை நியமிக்கும்போது அவர்களின் பெயர் உள்பட முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அவர்களுடைய புகைப்படம் மற்றும் கைரேகையை எடுத்து வைப்பதும் நல்லது. கைரேகையை எடுத்து வைத்தால் திருடும் எண்ணமுள்ள வேலைக்காரர்கள் கூட பயந்து போய் திருடமாட்டார்கள்.

முதியவர்கள்

* வீடுகளில் வயதான பெண்கள் தனியாக இருக்கும் நிலை ஏற்பட்டால் பணம் மற்றும் நகைகளை வங்கி லாக்கரில் கண்டிப்பாக வைக்க வேண்டும். யாராவது மர்ம நபர்கள் புகுந்து வயதான பெண்களை எளிதில் ஏமாற்றி நகை மற்றும் பணத்தை எடுத்து செல்வதை இதன் மூலம் தடுக்கலாம்.

* அடுக்குமாடிகள் மற்றும் பங்களா போன்ற வீடுகளில் வசிக்கும் பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் நட்போடு பழக்கம் வைத்துக்கொண்டால் ஆபத்து நேரங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவி செய்ய வாய்ப்பாக இருக்கும்.

ஜோதிடர்கள்

* ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், போலி சாமியார்கள், நகை பாலிஷ் போடுபவர்கள், பழைய பொருட்கள் வாங்குபவர்கள் போன்ற நபர்களை, தனியாக இருக்கும் பெண்கள் தங்கள் வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது. பால்காரர், பேப்பர்காரர், காய்கறி விற்பவர், கேபிள் டி.வி. ஆபரேட்டர், சமையல் கியாஸ் சிலிண்டர் கொண்டு வருபவர், சலவைகாரர் போன்றவர்களின் பெயர்கள், அவர்களது முகவரி போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களை பெரும்பாலும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பது நல்லது. வெளியில் வைத்தே காரியத்தை முடித்துவிட்டு, அவர்களை அனுப்பிவிடுவது சால சிறந்தது.

டெலிபோன் எண்கள்

* அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருக்கும் பெண்களை, பார்வையாளர்கள் யாராவது பார்க்க வந்தால், அவர்களை காவலாளிகள் நன்கு விசாரிக்க வேண்டும். அந்த பார்வையாளர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்ற விஷயத்தை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தகவல் சொல்லி அவர்கள் அனுமதித்தால் மட்டுமே பார்வையாளர்களை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

* ஒவ்வொரு வீட்டிலும் அருகிலுள்ள போலீஸ் நிலைய தொலைபேசி எண், தீயணைப்புத்துறை டெலிபோன் எண், அவசர போலீஸ் தொலைபேசி எண், அல்லது தங்களுக்கு தெரிந்த போலீஸ் துறையில் பணிபுரியும் அதிகாரிகளின் தொலைபேசி எண் போன்றவற்றை ஒரு டைரியில் எழுதி வைத்திருக்கலாம். அல்லது டெலிபோன் எண்களை ஒரு பேப்பரில் எழுதி சுவரில் ஒட்டி வைத்திருக்கலாம். ஆபத்து காலங்களில் இந்த டெலிபோன் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்பதற்கு வசதியாக இருக்கும்.



No comments:

Post a Comment

Adbox