Breaking

LightBlog

Sunday, August 22, 2010

நான் மகான் அல்ல - விமர்சனம்

கார்த்தி நடிப்பில் அடுத்த ஹிட் ’நான் மகான் அல்ல’. அப்பட்டமான சென்னை கதைக் களம். ஒரு சராசரி மனிதனின் கோபம் தான் படம். அந்த கோபம் எதனால் என்பதும் அதற்கான நியாயமான காரணங்களும் படத்தில் சொல்லப்படுகிறது. வெண்ணிலா கபடிக்குழு இயக்குனர் சுசீந்திரன் கொடுத்திருக்கும் முற்றிலும் மாறுபட்ட படம்.

திரும்பிப் பார்த்தாலே பத்து பேர் பறக்கும் ஹீரோயிஸக் கதைகளை பார்த்திருப்போம். கால் கையோடு நான்கு ஐந்து பேர் கட்டிப்புரண்டு உருளுகிற எதார்த்தமான சண்டைக் காட்சி ரசிகர்களுக்கு ரொம்பவும் புது அனுபவம். ஹீரோயிஸ அபத்தங்களை உடைத்து எரிந்த சுசீந்திரனுக்கு ஒரு சல்யூட்.


நடுத்தர குடும்பத்து பையனாக ஜீவா ( கார்த்தி ). வாழ்க்கையில் எல்லா விஷயங்களையுமே ஈசியாக எடுத்துக் கொள்ளும் ஜாலி கேரக்டர். கால் டாக்ஸி ஓட்டும் அப்பா, பாசமான அம்மா, துறு துறு தங்கச்சி, டைம் பாசுக்கு நக்கலான நண்பர்கள், அழகான காதலி என வேல வெட்டி எதுவும் இல்லாத நிம்மதியான வாழ்க்கை. அழகான பூந்தொட்டிக்குள்ள வெடிகுண்டு வீசின மாதிரி ஜீவா வாழ்க்கையில் ஒரு பெரிய பிரச்சனை.

திடீரென மர்ம நபர்களால் ஜீவாவின் அப்பா கொல்லப்படுகிறார். எதற்காக இந்த கொடூரக் கொலை, யார் இதை செய்தவர்கள் என்பதை ரொம்பவும் புதுவிதமான திரில்லோடு சொல்லியிருக்கிறார் சுசீந்திரன்.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த கல்லூரிப் படிக்கும் இளைஞர்கள். அடுத்தவன் காதலியை கடத்திக் கொண்டுவந்து கற்பழித்து சடலத்தை துண்டுதுண்டாக வெட்டி கூவம் குப்பைகளில் தூக்கி எறிகிறார்கள். போலீஸ் விசாரணையில் ஜீவாவின் அப்பாதான் கடத்தி வந்த கால் டாக்ஸியின் டிடைவர் என தெரியவருகிறது. பசங்களின் கடத்தல் சங்கதி தெரியாத நிலையில் தவருதலாக அவர்களிடம் சிக்கிக் கொண்டதையும், கடத்தி வந்த பசங்களின் முகங்களை காட்டிக்கொடுக்கத் தயார் என்று போலீசிடம் சொல்கிறார் ஜீவாவின் அப்பா.

இந்த விஷயம் அறிந்த வில்லன் கும்பல் தான் தன் அப்பாவின் கொலைக்கு காரணம் என ஜீவாவிற்கு தெரியவருகிறது. ஜீவா வில்லன் கும்பலை எப்படி பழித்தீர்க்கிறார் என்பது சுறுசுறுப்பான விறுவிறுப்பு.


படத்தின் முதல் பாதியை அசத்தலான அரட்டையோடும் இரண்டாம் பாதியை கண்ணீர் கலந்த ஆவேசத்தோடும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். தன் முந்தைய படங்களைப் போல இயல்பான நக்கல் வசனங்களோடு முதல் பாதியில் வந்தாலும் படத்தின் இரண்டாம் பாதியில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கார்த்தி.

காஜல் அகர்வாலுடன் காதல் லூட்டி ஒருபக்கம் என்றால், ராயபுரம் முட்டுச்சந்துகளில் வில்லன்களை விரட்டி விரட்டி அடிக்கும் மிரட்டல் மறுபக்கம்.

காஜல் அகர்வால் கேக் மேல் வைத்த செர்ரி பழம் மாதிரி வர்றாங்க போறாங்க, வேற எதுவும் பெருசா இல்லை. கார்த்திக்கு அப்பாவாக ‘பசங்க’ ஜெயப்பிரகாஷ் சரியான தேர்வு. நான் மகான் அல்ல அவருக்கு கிடைத்திருக்கும் மற்றொரு நல்ல கேரக்டர். வில்லன்களாக வரும் பசங்களில் ஒரு மூன்று பேர் மனதில் பதிகிற அசத்தல் நடிப்பு.

தன் திரைக்கதை நுணுக்கங்களை வெண்ணிலா கபடிக்குழு படத்திலேயே நிரூபித்த சுசீந்திரன், இதிலும் அதை சிறப்பான முறையில் செய்திருக்கிறார். ’கண்ணோரம் காதல் வந்தால்...’ என யுவன் ஷங்கர் ராஜாவின் குரல் ஒலித்ததும் தியேட்டரில் பலத்த கைதட்டல். பின்னணி இசையிலும் பின்னியிருக்கிறார் யுவன். படத்தில் வரும் அப்பா மகன் பாடல் தமிழ் சினிமாவின் பொக்கிஷப் பாடல்களில் ஒன்றாக இருக்கும்.

ரேணிகுண்டா படத்தின் சண்டை காட்சிகளில் தன் மிரட்டல் அடியால் மிரள வைத்த அனல் அரசு இதிலும் அடிக்கு அடி மிரட்டுகிறார். எதையும் அழகாகவே காண்பித்து பழக்கப்பட்ட மதியின் கேமரா அசல் சென்னையை ரொம்பவும் எதார்த்தமாக படம்பிடித்திருக்கிறது.

கொடூரமாக நடக்கிற ஒரு உண்மை விஷயம். கேக்கில் தடவிய க்ரீம் போல் முதல் பாதியில் கொஞ்சம் அரட்டை பிறகு மிரட்டல் என உஷாராக கையாண்டிருக்கிறார் இயக்குனர். வில்லன்களை அடித்து முடித்ததும் வழக்கமான ஹீரோயிஸ வசனங்கள் எதுவும் பேசாமல் ஹீரோ கார்த்தியின் பார்வையிலேயே அனைத்தையும் புரியவைக்கிறார் இயக்குனர்.

நான் மகான் அல்ல - அசத்தலான அடி

No comments:

Post a Comment

Adbox