வம்சம் - விமர்சனம்
பசங்க பாண்டிராஜின் இரண்டாவது படம் என்பதே படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. கலைஞரின் பேரன் அருள்நிதி அறிமுகம், இதுவரை காணாத கிராமத்துக் கதைக் களம் என இன்னும் கூடுதல் எதிர்பார்ப்புகள்.
புதுக்கோட்டை கிராமங்களின் கதை என்றாலும் ரொம்பவே ஆய்வு செய்ய வேண்டிய கதை. எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவர், நண்டன் கோப்பன், நஞ்சுண்டா ம.ஓ.சி, யானையைக் குற்றிய ஐநூற்றிப் புரையர், வானாதி விராயர், தொண்டைமான் புரையர், கானாட்டுப் புரையர் போன்ற 11 வம்சங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை. கிராமத்துத் திருவிழாக் கோலங்களை கண்முன் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். ஒவ்வொரு திருவிழாக்களிளும் 11 வம்சங்களும் கலந்து கொள்கிறார்கள்.
இரண்டு வம்சங்களுக்கு இடையே நடந்தவையும் நடக்கிறவையும் தான் கதை. எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவர் வம்சத்தின் ஒரே வாரிசு நாயகன் அருள்நிதி (அன்பரசு). அருள்நிதிக்கு அன்பான அம்மா. யாரிடமும் வம்பிற்கு போக மாட்டேன் என்று அம்மாவிடம் சத்யம் செய்யும் அருள்நிதி, காதலிக்காக அதை மீறுகிறார்.
நஞ்சுண்டா ம.ஓ.சி வம்சத்தை சேர்ந்தவர் வில்லன் ஜெயப்பிரகாஷ். அவரின் ஒரே வாரிசு ராஜ்குமார். வானாதி விராயர் வம்சத்தை சேர்ந்தவர் நாயகி சுனைனா. நஞ்சுண்டா ம.ஓ.சி வம்சத்திற்கும் வானாதி விராயர் வம்சத்திற்கும் பகை. சின்ன சின்ன பிரச்சனை பெரிய அளவில் போனதால் வானாதி விராயர் வம்சத்தை சேர்ந்த சுனைனாவின் அப்பாவை கொன்று பழி தீர்க்கிறார் வில்லன் ஜெயப்பிரகாஷ்.
அதுவரை சாதுவாக காதல் டூயட் பாடிக் கொண்டிருந்த சுனைனா (மலர்) கொதித்தெழ, வில்லன் ஜெயப்பிரகாஷ் மேல் அனைவரும் பார்க்கும்படி ஊர்முச்சந்தியில் சாணியைக் கரைத்து ஊற்றி காறித்துப்புகிறார். இந்த அவமானத்தை தாங்க முடியாத நிலையில் சுனைனாவை பழித்தீர்க்க துடிக்கிறார் வில்லன்.
பிறகு தான் தெரியவருகிறது, ஏற்கெனவே அருள்நிதியும் சுனைனாவும் காதலிக்கிறார்கள் என்று. வில்லனின் வாரிசு ராஜ்குமார் சுனைனாவை தாக்க ஆட்களோடு செல்லும் போது, ஆட்களை தொம்சம் செய்து வம்சத்தின் பெயரை காப்பாற்றுகிறார் அருள்நிதி. இப்போது வில்லனின் பகை சுனைனாவின் மேல் மட்டுமல்லாது அருள்நிதி மேலும் வளர்கிறது.
அதுமட்டுமல்ல வில்லன் ஜெயப்பிரகாஷ் தான் அருள்நிதியின் அப்பாவை சாராயத்தில் விஷம் வைத்து கொன்றவர் என்ற செய்தியும் தெரியவருகிறது.இதன் பிறகு தான் ஆட்டம் களைக்கட்டுகிறது. அருள்நிதிக்கும் வில்லன் மகன் ராஜ்குமாருக்கும் நடக்கிற சண்டையில் வெல்வது யார் என்ற போட்டி. வம்சம் அழிந்ததா வளர்ந்ததா என்பதே முடிவு.

முதல் படம் என்றாலும் அருள்நிதி சண்டைக் காட்சிகளில் மிரட்டல். காதல் காட்சிகளிலும் கூட வெளுத்துக்கட்டுகிறார். முக்கியமாக க்ளைமாக்ஸ் காட்சியில் அடி பின்னிவிட்டார்.
சுனைனா! அப்பா... என்ன நடிப்பு! இத்தனை நாள் இந்த நடிப்பை எங்கே ஒளித்துவைத்தாரோ. வில்லன்கள் வரும் நேரம் இடுப்பில் இருக்கிற சைக்கிள் செயினை உருவும் காட்சியில் சுனைனா சூப்பர் ஆக்டிங்.
வில்லன் ஜெயப்பிரகாஷ் கச்சிதமான கதாபாத்திரம். தமிழ்சினிமாவின் முக்கியமான வில்லன்களின் பட்டியலில் இடம் பெற போவது நிச்சயம். இவருக்கு மகனாக வரும் இன்னொரு வில்லன் ராஜ்குமார், பார்வையிலேயே வில்லத்தனங்கள். சண்டை காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார்.
பிளாஷ் பேக்கில் அருள் நிதியின் அப்பாவாக வரும் கிஷோர் கலக்கல் நடிப்பு. குதிரை ரேஸ், சிலம்பாட்டம் என மனுஷன் படு ஜோர். ஒவ்வொரு கதாபாத்திரமும் கச்சிதமான படைப்பு. முக்கியமாக தொண்டைமான் புரையர் வம்சமாக வரும் கஞ்சா கறுப்பு மிரட்டலுடன் கலகலப்பு.
எதார்த்தமாக மட்டும் அல்லாது டெக்னிக்கலாகவும் படம் சூப்பர். ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துச்சாமி பாராட்டப்பட வேண்டியவர். ஜல்லிக்கட்டு காளைகள், மாட்டு வண்டிகள், குதிரைகள் என அத்தனை பிரம்மாண்டத்தையும் கேமராவுக்குள் கொண்டுவந்திருக்கிறார். இசையமைப்பாளர் தாஜ் நூர், காட்சியாய் வந்திருக்கும் அத்தனைக்கும் இசையால் சிறப்பு சேர்த்திருக்கிறார். பாடல்களை விட பின்னணி இசையில் பிரமாதம்.
எதார்த்தம் என்ற பெயரில் திருவிழா காட்சிகள் ரொம்ப நீளம் என்பது ஒன்றே படத்தின் மைனஸ். சில காட்சிகளில் ஆவணப்படம் போல் ஒரு உணர்வு. நீளமான காட்சிகளுக்கு கொஞ்சம் கத்தரி போட்டிருந்தால் வம்சம் இன்னும் கச்சிதம்.
வம்சம் - ரசிகர்களின் வசம்!



No comments:
Post a Comment