சோர்வு

இந்த அவசர உலகில் பெரும்பாலானோர் அடிக்கடி சலிப்புடன் பயன்படுத்தும் வார்த்தை. ’உடல் வலி-தசை வலி’ என உடலின் உற்சாகத்தைக் குறைக்கும் வலியுடன், குதூகலமாய் இருக்க வேண்டிய மனமும் பிடிப்பின்றி, பிடிவாதமாய் இறுக்கத்துடன் இயங்குவதும் இந்த சோர்விற்குக் காரணம். “ஏய்! மணி ஏழாகுது.. பிள்ளைங்க 8 மணிக்கு ஆட்டோ ஏறனும்.. நீ எழுந்திரிக்காம..!” கொஞ்சம் கோபமான குரலில் காலை ஆரம்பிக்கும் போது, வெறுப்பு வேர் விட ஆரம்பிக்கும்; ”ஏன்.. நான் தான் கிளப்பி அனுப்பனுமா? தலைவலிக்கிறது; உடம்பு எப்படி வலிக்கிறது தெரியுமா? தினம் டவுண் பஸ்ஸில் போய் வந்தா தெரியும்!,” எனத் துவங்கும் காலை திருப்பள்ளி எழுச்சி உரையாடல் படிப்படியாய்ச் சூடேறி, கொஞ்ச நேரத்தில் தனி ஆவர்த்தனம் ஜகல்பந்தியாய் மாறி, ஸாக்ஸ்-ஐ தேடும் பையன் முதுகில் மத்தளம் வாசித்து, பலரையும் காலைவேளை விசும்பலுடன் தொடங்க வைப்பது இந்த காலை வேளைச் சோர்வும் அலுப்பும்தன்.
”முன்னெல்லாம் பீரியட்ஸ் டைம்ல சோர்வு, எரிச்சல், தலைவலி-ன்னு கம்ப்ளெய்ண்ட் பண்ணுவா டாக்டர்! இப்ப எப்ப பார்த்தாலும் முதுகு வலி, கால் வலின்னு சோர்வுடனேயே இருக்கிறார். முப்பதுகளிலேயே உற்சாகம் ஓடிப் போயிடுமா டாக்டர்?”..இந்த கேள்விக்கு பதில் தேடும் முன்னரேயே, கொஞ்சம் விசும்பலுடன், “நான் என்னமோ வேணும்னு நடிக்கிறேன்னு இவருக்கு நினைப்பு; டிவி-விளம்பரத்தில காபி கலக்கிறவ, காய்கறி வாங்கிறவ, துணி துவைக்கிறவ, கம்ப்பியூட்டர்-ல வேலை செய்றவ எல்லாம் எவ்வளவு ஃப்ரெஷ்ஷா இருக்கிறா?-னு சொல்றாரு டாக்டர்?அவங்க நடிக்கிராங்களா? இல்லை நான் நடிக்கிறேனா-ன்னு தெரியல இவருக்கு! ஆனால் என்னமோ காலையில் எழுந்திரிக்கும் போதே சோர்வு இருக்கிறது; தசை எல்லாம் வலிக்கிறது; எலும்பிற்குள் குடைகிறது;,” என வருத்தப்படுவர்.
இது இன்று பல வீட்டிலும் பெண்மணிகள் அவதிப்படும் விஷயம்.
“ஆபீஸ் விட்டு வந்தப்புறம், கொஞ்சம் கடைக்குப் போய் வரலாம்னா இப்ப முடியாது; நானே நொந்து நூடுல்ஸாகி வந்துருக்கேன்; மனுஷன் வீட்லயாவது நிம்மதியாய் இருக்க விடமாட்டேங்கிறியே!-ங்கிறாரு. அட்லீஸ்ட் ஞாயிற்று கிழமையிலேனும் பிள்ளகளை கூட்டிக்கிட்டு வெளியே போய்வரலாம்னா, நீ போயேன்; என்னையேன் தொந்தரவு பண்ணுகிறாய் என்கிறார்” இது 40 வயதை ஒட்டிய பெரும்பாலான கணவர்கள் மீதான அர்ச்சனை.. ஏனிந்த அலுப்பும் சோர்வும்? என்ன நோய் இது? உடல் உளைச்சலா? மன உளைச்சலா?
உற்சாகமுமான உடலும், குதூகலமான மனமும் வாழ்வைப் பிடிப்புடனும், நம்பிக்கையுடனும், ஆரோகியத்துடனும் நகர்த்திட மிக மிக அத்தியாசமானவை. இவ்விரண்டையும் சிதைக்கும் அலுப்பும் சோர்வும் உடல்-மனம் இரண்டின் நோய்களாகவும் இருக்கக் கூடும்.
இரவின் தூக்கம் 6-7 மணி நேரம் எந்த இடையூரும் இன்றி இருந்தால் காலை அலுப்பின்றி உற்சாகமாய் விடியும். அசீரணக் கோளாறு, கால்சியம் மற்றும் உயிர்சத்துக் குறைவால் இரவில் கெண்டைக்காலில் வரும் தசை வலி, இரத்தக் கொதிப்பால் வரும் காலை நேர தலைவலி, சர்க்கரை நோயில் இரவில் தூக்கத்தை கெடுத்து இரண்டு மூன்று முறை வரும் சிறுநீர், இவை காலை நேர அலுப்பைத் தருவதில் முக்கிய நோய்கள்.
இவை தவிர இரத்த சோகை இருந்தாலோ, தைராய்டு சுரப்பு அளவிற்கு குறைவாக இருந்தாலோ காலை உற்சாகமாக இருப்பதில்லை. மலச்சிக்கல் உடலையும் மனதையும் மந்தப்படுத்தும் முக்கிய காரணி. இன்னும் சர்க்கரை, இரத்தக் கொதிப்பு இருதய நோய்க்கென ஏதேனும் சிகிச்சை எடுத்துவரும் போது, மருந்துகளுடன் சரியான மருத்துவர் பரிந்துரைத்துள்ள உயிர்சத்து, ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மாத்திரைகளைச் சரிவர சாப்பிடாமல் இருப்பதும் உடல் சோர்வைத்தரும். சில மருந்துகள் சீரணத்தில் இடையூறு செய்யக் கூடியன. காய்,கனிகளில் இருந்து சத்துக்களை உடல் பிரித்தெடுக்கும் தன்மையை தடுக்க கூடியன. இதனால், நோய் கட்டுப்படுடன் இருந்தாலும், உடல் சோர்வும் அலுப்பும் உடன் இருந்து கொண்டே இருக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் முடியும் சமயத்தில் ஹார்மோன்கள் குறைவால் ஒருவித எரிச்சல், படபடப்பு, பய உணர்வு, திடீரென வியர்த்துப் போதல் நிகழ்வுகளும் காலை சோர்விற்கு முக்கிய காரணங்கள்.

சோர்விற்கு உடல் நோய்க்கு இணையான உளவியல் காரணமும் உண்டு. ஒரே வேலையைச் சவாலின்றி தொடர்ந்து பல ஆண்டுகளாக செய்து வருவதில் ஏற்படும் சலிப்பு, எந்த வேலைக்கும் ஒரு சின்ன பாராட்டுதல் கூட கிடைக்காமல் இருத்தல், (அட! கொத்தவரங்காய் பொரியல் அசத்துதே! என சாப்பிடும் போது ஒரு சின்ன பாராட்டு கொடுத்துப்பாருங்கள்.. ஒரு பாட்டில் ஹார்லிக்ஸை போட்டு குழம்பு வைத்த உற்சாகம் பீறிக் கொள்ளும்.), ஈ.எம்.ஐ கட்டுவதற்காக மட்டுமே பிடிக்காத பணியை போலிப் புன்னகையுடன் செய்வது, என பல உளவியல் காரணங்கள் இன்று பெருகி வருகின்றன.
காதலிக்குத் தர விரும்பும் எதிர்பாராத முத்தம் கணவனுக்கு தருவதில் வரும் ஈகோ பிரச்சினை, வளர்ந்துவிட்ட குழந்தைகளுடன் உள்ளபோது தவிர்க்கப்படும் உடல் உறவுகள் என காதலும் காமமும் கட்டிப்போடப் படுவதாலும் வாழ்வில் அலுப்பும் சோர்வும் பெருகுவது இன்றைக்கு மிக முக்கிய காரணம்.
எந்த உணவு உற்சாகத்தை வரவழைக்கும்? அலுப்பை அடித்து விரட்டும்?. முதலில் அலுப்பைத் தரும் நோய் ஏதுமிருப்பின் சரியாகக் குடும்ப மருத்துவரை அணுகி கணித்து முறையான சிகிச்சை பெறுவது அவசியம். அடுத்து, இரவில் நல்ல சீரணமும் தடையில்லாத் தூக்கமும் தரும் உணவைத் தேர்ந்தெடுப்பதும் அவசியம்.
கனி வகைகள் அதில் உங்கள் முதல் தேர்வாக இருத்தல் வேண்டும். பழங்கள் இறைவன் நமக்கு அளித்த கசக்காத விட்டமின் மாத்திரைகள். அதிலும் குறிப்பாக, ஒரு நெல்லிக்கனி, காய்ந்த திராட்சை, உலர்ந்த அத்தி தினசரி காலை வேளையில் சாப்பிடுவது தினம் முழுமையும் உற்சாகத்தை தரும். ஒரு வேளை உணவு (காலை அல்லது இரவு) முழுமையாக பழ உணவாக இருப்பது சிறப்பு. பழங்களில் வெளிநாட்டு பாலிஷ் ஆப்பிள், ஆரஞ்சும் தான் சத்தானதென நினைப்பது தவறு. அவற்றைக் காட்டிலும் பப்பாளி, வாழை, மாதுளை, சீதா, அன்னாசி சிறப்பானது.
பித்த உடம்புக்காரர்கள் காலையில் இஞ்சி, இரவில் கடுக்காய் சாப்பிடுவது தினம் முழுமையும் உற்சாகத்தை தரும். இரத்தக் கொதிப்பு அதிகம் உள்ளவர்கள் முருங்கை கீரை சூப், சர்க்கரை நோயாளிகள் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த பால் கலக்காத பச்சைத்தேநீர்(green tea). என காலைப் பானமாக அருந்தலாம். தினசரி 4-5 லிட்டர் தண்ணீர் அருந்துவது மிக அவசியம்
அதிக புளி, சீரணத்திற்கு சிரமம் கொடுக்கும் எண்ணெயில் பொரித்த உணவுகள் தவிர்க்கப் பட வேண்டும். தேர்ந்த உணவுகளுடன் தெளிந்த மனமும், அக்கரை, அன்பு, பாசம், காதல் என உறவின் வெளிப்பாடுகளும் தான் அலுப்பைத் தவிர்க்கும் - சோர்வை குணப்படுத்தும் முக்கிய மருந்துகள்



No comments:
Post a Comment