சித்தமருத்துவம் நேற்று-இன்று- நாளை
“இந்த வைரஸ்-ஐ கொல்ல மருந்து எப்போது வருமென தெரியாது. ஆனால், உடலை வலுப்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பாற்றலை நெறிப்படுத்தி, வைரஸை செயலிழக்கச் செய்து, உடல் நடத்தும் போராட்டத்தில் பிற உறுப்புகள் வலு குறையா வண்ணம் உடலையும் மனதையும் பேணும் நல்ல பாரம்பரிய மருந்துகளும், உணவும் மட்டுமே எச்.ஐ.வி-யில் இருந்து இவ்வுலகினைக் காக்கும். அந்த திறன் பாரம்பரிய மருத்துவ முறைகட்கு உள்ளதென கருதுகிறேன்.” –என்பது.
லுக் மாண்டேங்கரின் அந்த கருதுகோள், சித்தமருத்துவப் பார்வைக்கானத் தொடக்கப் புள்ளி என கருதுகிறேன். முழுமையான அணுகுமுறை(holistic approach) எனும் தனித்துவத்தை மட்டும் சித்தமருத்துவம் பெற்றிருக்கவைல்லை. அதையும் தாண்டி அதன் தத்துவப் பிண்ணனி, உலகின் ஒடுக்கப்படும் சமூகமும் உயரும் சமத்துவச் செயல்பாடு, நவீனத்தையும் உள்வாங்கும் ஏற்புடைமை என சித்த மருத்துவத்தின் வீச்சும் நிட்சியும் இதனை முழுதாய்ப் புரிந்தோரும், புரிய முனைவோர் எவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியது. இது, இன்றைய கேள்விகட்கும் சவால்களுக்கும் விடை தரும் விடியல் கீற்றும் கூட ..எப்படி? சுருக்கமாய்ச் சொல்ல விழைவோம்
நேற்று...
சித்த மருத்துவத் தத்துவம் அல்லது புரிதல், சாங்கிய, புத்த, சமண தத்துவங்களுக்கு முற்பட்டது. நோய் ’’ஆவி அல்லது முற்பிறப்பின் கொடூரங்களுக்கான’ தண்டனை என்ற புரிதலில் இருந்து விலகி, அண்டத்தில் உள்ளதே பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம் என்ற பொருள் முதல்வாதத்தை முன்வைத்து உடலுக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள இணைப்பை புரிந்து, பதிவு செய்து, நோயை நாடவும்/நோயைத் தேடவும் செய்தது சித்த மருத்துவம். ஏறத்தாழ 4000-5000 ஆண்டுகளேனும் இப்புரிதலில் நோயின் கூறுகளையும் குணங்களையும் தத்தம் நுட்பமான, ஆழ்ந்த அக/ புற பார்வையில் கணித்து, அதனைத் தீர்த்து மனித உடல்நல மேம்பாட்டிற்கும் அவன் சமூக இணக்கங்களுக்கும் சேர்த்து வழி வகுத்தது சித்தமருத்துவம். 1800களில் தொழிற் புரட்சியும் அதன் நீட்சியாய் தொடர்ந்த இயந்திர யுகத்தில் ’முழுமை புரிதலின்’(holistic) முக்கியத்துவம் புறக்கணிக்கப்பட்டு நோய்க் காரணிகள் நவீனமாய் அறியப்பட்டு (reductionistic), புதிய உடல்இயங்கியலுக்கு இணக்கமான மருந்துகள் ஏராளமாய்ச் சந்தைப்படுத்தப்பட்டன. அதில் வாழ்நாள் காலம் நீண்டதும் பல தொற்றின் மரணப்பிடியில் நாம் தப்பித்ததும் மறக்கவோ மறுக்கவோ முடியாதது.
இன்று......
பழைய தொற்றுக்கள் நம்மை விட்டு விலகினாலும், இன்று மதுமேகம், இரத்தக் கொதிப்பு, புற்று நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இந்த தொற்றாத நோய்களின் பிடி இந்தியாவில்(ஏன்.. உலகெங்கும்) மிக அதிகமாக இறுகி வருவதாக முர்ரே மற்றும் லோப்ப்பசு போன்ற மருத்துவ அறிஞர்கள் எச்சரித்து உள்ளனர். கிட்டத்தட்ட 1000-ல் 767 பேரது மரணம் இவ்வகை தொற்றாத வாழ்வியல் நோய்களால் நிகழ்வகிறது என்கிறது அவரது அறிக்கை. அதிலும் மாரடைப்பினால், இரத்தக் கொதிப்பினால், புற்று நோயினால்.என மரணம் நிகழ்வதாகவும், ஏறத்தாழ 26% ற்கு இவை அடுத்தடுத்த ஆண்டுகளில் உயரக் கூடும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
நேற்றைய தொழில் நுட்ப நீட்சியில் மறந்த ’முழுமையால்’ நாம் இழந்ததும் இழந்துவருவதும் பல. உணவுப் பழக்கவழக்க மாறுபாடுகள், உடலுழைப்பு குறைவான வேலை, மது, புகை போன்ற பழக்கம், மன உளைச்சல், மனச்சுமை, அக மகிழ்வின்மை..என்ற நீடிக்கும் பட்டியல்தான்..இவை தான் இந்த நாட்பட்ட தொற்றா வாழ்வியலின் பிடியை இறுக்குவது. பெருகும் இந்த இறுக்கங்களில் பழைய பாரம்பரியங்கள் அரை மனதுடன் ஆங்காங்கே தூசு தட்டப் படுகிறது. அதன் தத்துவமோ சமூகப்பிணைப்போ கட்டறுக்கப்பட்டு நானோ துகளகளும் நுண் மூலக்கூறுகளும் வேகவேகமாக தேடப்படுகின்றன. ஆவணப்படுத்தப்படுகின்றன. காப்புரிமைக்கு காத்து நிற்கின்றன. சித்த மருத்துவமும்..ஆனால் கடைசி வரிசையில்! பிரித்தெடுக்கப்பட்ட ஓகமும், உணவு மாண்பும் fitness center- வனப்பிலும் Nutraceuticals and functional foods-வணிகத்திலும் பில்லியன் டாலரில் பெருகி வருகிறது.
நாளை
உடல் வெறும் ’’புரதக் கற்றை’(proteomics)’யாக மட்டுமே பார்க்கும் காலம்; நோய் வற்றா வணிக ஆதாரமாக மட்டும் வளர்ந்த நவீன மருந்துக் குழுமங்களால் சிந்திக்கப்படும் காலம்; இன்னும் புதிய நுண்ணுயிர்கள் படைக்கப்படுவதும், மருந்துக் காப்புரிமை வர்த்தகதின் மூலம் கோலோச்சுவதும் அதிகம் நடக்க இருக்கும் காலம். பொதுமைப்படுத்தப்படாத துறையும்-பொருளும் வளர்ந்த நாடுகளால் வல்லரசால் நிர்மூலமாக்கப்படும் காலம். இதில் நாம் எப்படி பயணிக்க வேண்டும்?. நம் பற்பங்களின் ’நானோ துகளமைப்பை’ நிலை நாட்டியா? ’’களை யல்ல நிஜம்’-’ எங்கள் மூலிகை என கட்டுரை வாசித்தா?
சித்தமருத்துவத்தின் தனித்துவம் அதன் பன்முகத் தன்மையும்(Synergy), ஒவ்வொரு நோயருக்கும் ஒவ்வொரு விதமாய்ப் (pharmaco-genitic variations) பணி செய்வதும் தான். பொதுமைபடுத்த முடியாதது அதன் சிறப்பே தவிர இழுக்கல்ல. பொதுமைப்படுத்துவதுற்காக அதனை நவீன ஆய்விற்கு மட்டும் உட்படுத்தி விளக்குவது அதன் பன்முகத்தன்மையை சிதைக்கத்தான் செய்யும். நவீன ஆய்வுகளுக்கு உள்ளாக்குதல் குறித்த சர்ச்சையில், மருந்துகளுக்கான மூலப் பொருட்களின் கலப்படமற்ற நிலைக்கும், மருந்துகள் முடிவுற்றுள்ளதா எனும் ஆய்விற்கும், இன்னும் பெரும் தேவைக்கென உற்பத்தித்திறனை அதிகரித்தலில் மட்டும் நவீன அறிவியல் உத்திகளை பயன் படுத்துதல் ஓரளவிற்கு நலம் பயக்கக் கூடும். Pharmaco genitics படி உணவையும் கற்பத்தையும் பானத்தையும் வேண்டுமானால் ஓரளவிற்குப் பொதுமைப்படுத்தலாமே தவிர மொத்தமாய் மருந்துகளைப் பொதுமைப்படுத்துவது, சிதைவிற்கு வழிவகுத்து விடும். சித்த மருத்துவத்தின் முழுமை நவீன (நவீனம் மேற்கத்தியம் அல்ல.கொஞ்சம் பிறதுறையினருக்கும் புரிதல் தரும் அறிவியல் மட்டுமே.) விளக்கங்களுடன், தத்துவப் புரிதலுடன் சாமனியனுக்கும் போய்ச் சேரும் வகையில் நம் ஆய்வும், மருத்துவப் பயிற்சியும், மருந்து செய்முறையும், அரசின் நல்வாழ்வுக் கொள்கைகளும் அமைக்கப்படுவது தான் காலத்தின் கட்டாயம்



No comments:
Post a Comment