விறகுக்காய் வெட்டப்படும்
மரத்திலிருந்து ஒரு குஞ்சுக்குருவி.
துயர் ஏதும் அறியாத
துஞ்சுக்குருவி துயிலில்.
மூங்கில் காட்டில்
முகாரி பாடும் மைனாக்கள்.
அரவமில்லாக் கிளைகளில்
அரிவாள் வெட்டு அதிர்வுகளில்
ஆபத்தின் அறிகுறி.
கூடு காத்த தாய்க் குருவியின்
தகவல் ஏதும் இல்லை.
உயிர் துடிக்கும் கிளைகளின்
துக்கம் விசாரித்துபோனது
துயர்காற்று.
உறக்கம் உடைந்த
குஞ்சுக்குருவி "கீச்" கதறலில்
கிளைகளின் இலைகளை கிழித்தது.
துண்டானது கிளை துடித்தது கிள்ளை.
ராட்டின கூண்டாய் அலைபாய்ந்த கூடு
அடிவாரத்தில் 'பொத்'தென்று ஐக்கியமானது.
இறகுகள் முளைக்காத சிறகுகளை
எத்தனை முறை அடித்தாலும்
எழும்பமுடியவில்லை.
குருவி நினைத்துக்கொண்டது இன்று
கூண்டோடு கைலாசம்தான்...
கடத்தப்பட்டது கூண்டோடு?! இப்போது...
குழந்தைப்பேறு இல்லாத விறகு வெட்டியின்
வீட்டுக் குருவியாய் அந்தக் கூட்டுக்குருவி.
இறகுகள் முளைக்கும்வரை...




No comments:
Post a Comment